ஞாயிறு, 17 ஜனவரி, 2010

ப்யூச்சர் ஜெனரலி இன்ஷ்யூரன்ஸ் வங்கிகளில் பாலிசி விற்பனை


ப்யூச்சர் ஜெனரலி இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம், வங்கிகளின் வாயிலாக காப்பீடு பாலிசிகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

கிஷோர் பியானி குழுமம், இத்தாலியைச் சேர்ந்த ஜெனரலி குழுமம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனம் ப்யூச்சர் ஜெனரலி. இது ஆயில் காப்பீடு பாலிசிகளை விற்பனை செய்கிறது. இதற்கு 84 நகரங்களில் கிளைகளும், 163 காப்பீடு பாலிசி விற்பனை மையங்களும் உள்ளன. இதன் வாயிலாக 10 விழுக்காடு காப்பீடு பாலிசிகள் விற்பனையாகின்றன.

ப்யூச்சர் ஜெனரலி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான தீபக் சூட் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்கள் காப்பீடு பாலிசிகளை விற்பனை செய்வதற்காக பொதுத்துறை, தனியார் துறை வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கின்றோம். இந்த மார்ச் இறுதிக்குள் வங்கிகள் வாயிலாக கணிசமான அளவு காப்பீடு பாலிசிகளை விற்பனை செய்வோம்.

பொதுத்துறை, தனியார் வங்கிகள் மட்டுமல்லாது, கிராமப்புறங்களில் காப்பீடு பாலிசிகளை விற்பனை செய்வதற்காக கூட்டுறவு வங்கிகள், வட்டார வளர்ச்சி வங்கிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.

உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கூட்டுறவு வங்கி மூலமாக காப்பீடு பாலிசிகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளோம். நாங்கள் ஏற்கனவே 18 ஆயிரம் காப்பீடு பாலிசிகளை கிராமப்புற மக்களிடம் விற்பனை செய்துள்ளோம்.

இந்த மார்ச் மாதத்திற்குள் மருத்துவ காப்பீடு உட்பட நான்கு புதிய காப்பீடு திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.

ப்யூச்சர் ஜெனரலி “சஞ்சிவாணி ப்ளஸ்” என்ற பெயரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் யூலிப் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் ஒரே தடவையாக ரூ.75 ஆயிரம் பிரிமியம் செலுத்தலாம். அல்லது தவணை முறையிலும் பிரிமியம் செலுத்தலாம்.

ப்யூச்சர் ஜெனரலி மொத்த பிரிமியத்தில் 72 விழுக்காடு .யூலிப் திட்டங்கள் வாயிலாகவும், மற்றவை மற்ற காப்பீடு திட்டங்கள் வாயிலாக கிடைக்கிறது. இது ஏற்கனவே யூலிப் உட்பட 17 காப்பீடு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்நிறுவனம் சென்ற ஆண்டு இறுதி வரை மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரம் பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் ரூ.300 கோடி வர்த்தகம் செய்துள்ளது. இதை நிதி ஆண்டின் இறுதிக்குள் ரூ.750 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக