செவ்வாய், 19 ஜனவரி, 2010

ரூ.6,000 லஞ்சம் வாங்கிய கலெக்டரின் பிஏ கைது


பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் சிறுகூடலை சேர்ந்தவர் மணிவேல்.(56). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இருதய நோயாளியான மணிவேல், கடந்த அக்டோபர் 23ம் தேதி விடுப்பு எடுத்திருந்தார்.

அன்று கலெக்டரின் நேர்முக உதவியாளர் தாவூத், சிறுகூடல் நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது மணிவேல் பணியில் இல்லாததால், அவரை சஸ்பெண்ட் செய்ய தாவூத் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மணிவேலை கலெக்டர் விஜயகுமார் சஸ்பெண்ட் செய்தார்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் தாவூத்தை மணிவேல் சந்தித்தார். அவரிடம் தனது மருத்துவ சான்றிதழை கொடுத்தார். ‘மாரடைப்பு ஏற்பட்டதால் தான் விடுமுறை விண்ணப்பம் அளிக்காமல் விடுமுறை எடுத்தேன். எனவே என்னை மீண்டும் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தாவூத்திடம் கேட்டார். அவர் தனது உதவியாளர் மதியழகனிடம் அனுப்பி வைத்தார். மீண்டும் பணியில் சேர்ப்பதற்கு பரிந்துரைக்க தாவூத்துக்கு ரூ.5,000, தனக்கு ரூ.1,000 லஞ்சம் தர வேண்டும் என மதியழகன் கேட்டார்.

இதுபற்றி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் மணிவேல் புகார் செய்தார். போலீஸ் அறிவுரைப்படி, கலெக்டர் அலுவலகத்தில் மதியழகனிடம் ரூ.6,000த்தை மணிவேல் நேற்று கொடுத்தார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், மதியழகனை கைது செய்தனர். விசாரணையில், தாவூத்தான் லஞ்சம் வாங்க சொன்னதாக மதியழகன் கூறியதால், தாவூத்தையும் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக