செவ்வாய், 26 ஜனவரி, 2010

சன் டிவியின் புதிய தொடருக்கு நடிகர், நடிகைகள் தேர்வு


சென்னை : இயக்குனர் திருமுருகன் இயக்கிய ‘மெட்டிஒலி’ மெகா தொடர் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடருக்கு ரசிகர்களிடம், குறிப்பாக பெண்களிடம் அதிக வரவேற்பு இருந்தது. தற்போது, இயக்குனர் திருமுருகன் சன் டிவிக்காக ‘நாதஸ்வரம்’ என்ற நெடுந்தொடரை இயக்க உள்ளார். திருபிக்சர்ஸ் பிரைவேட் லிட் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த தொடர் விரைவில் திங்கள் முதல் வெள்ளிவரை ஒளிபரப்பாக உள்ளது.

இந்த தொடரில் நடிக்க முழுக்க முழுக்க புதுமுகங்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். சென்னையில் நேற்று கே.கே.நகர் தாய் சத்தியா மெட்ரிகுலேசன் பள்ளியில் நடிகர்களுக்கான தேர்வு நடந்தது. இதில் 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தினகரன் நாளிதழில் கடந்த சில நாட்களாக வெளியான கூப்பனை கொண்டு வந்தவர்கள் ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டனர். 4 பேர் குழு, எல்லோரையும் நடித்து காட்டச் சொல்லி தேர்வு செய்தனர். தேர்வானவர்களில் சிலரை இயக்குனர் திருமுருகன் தேர்வு செய்தார். இன்று காலை, நடிகைகள் தேர்வு நடக்கிறது.

நாதஸ்வரம் தொடர் குறித்து இயக்குனர் திருமுருகன் கூறியதாவது:
சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி தொடர் அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்பை ஏற்படுத்தியது. அந்த தொடரில் கிடைத்த அனுபவங்களை மெருகேற்றி ‘நாதஸ்வரம்’ என்ற புதிய நெடுந்தொடரை இயக்க உள்ளேன்.

இதில் நடிப்பவர்கள் அனைவருமே புதுமுகங்கள். இதனால் கதாபாத்திரத்துக்கு ஏற்ற திறமையுள்ள நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருகிறேன்.
சென்னையில் நடந்த தேர்வில் 72 வயது நாடக கலைஞர் வந்திருந்தார். அந்த வயதிலும் நடிக்க வேண்டும் என்ற அவரின் ஆர்வம் என்னை வியப்படைய வைத்தது. ஆயிரக்கணக்கில் ஆட்கள் குவிந்ததால், அனைவரையும் தனித்தனியாக சந்தித்து தேர்வு செய்ய முடியவில்லை. ஒரு பகுதியினரை வரும் சனிக்கிழமை நடைபெறும் தேர்வில் கலந்து கொள்ள சொல்லியிருக்கிறோம்.

பலரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. தேர்வான அனைருக்கும் நடிக்க வாய்ப்பு தரப்படும். இந்த தொடர் காரைக்குடி உள்ளிட்ட பல இடங்களில் எடுக்கப்பட உள்ளது. இங்குள்ள பெரிய வீடுகளை சார்ந்து வாழும் குடும்பங்களின் பின்னனியை காட்டுவதாக தொடர் அமையும்.

இவ்வாறு திருமுருகன் கூறினார்.

1 கருத்து:

  1. வணக்கம் அண்ணா நான் மோகன்ராஜ் பவானிசாகர் .... நான் உங்கள் போன்று இருப்பேன்.... எனக்கு ஏதாவது வாய்ப்பு தாருங்கள்.... எனக்கு இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டது நான் ‌ஜவுளிநிறுவனம்‌ ஒன்றில் வேலை பார்த்தேன்.... ஆனால் துரதிருஷ்டவசமாக விபத்து நடந்தது..... எனக்கு ஆதரவு தந்தால் நன்று.....9025157733.....

    பதிலளிநீக்கு