புதன், 20 ஜனவரி, 2010

இந்தியாவின் மான்செஸ்டராக மும்பை மாறும்’


மும்பை: இந்தியாவின் மான்செஸ்டராக மும்பை மீண்டும் உருவெடுக்க மகாராஷ்டிர அரசுக்கு உதவி வழங்கப்படும் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்தார். பஞ்சாலைகள் நிறைந்த நகராக ஒரு காலத்தில் விளங்கிய மும்பை, இந்தியாவின் மான்செஸ்டர் என வர்ணிக்கப்பட்டது. ஆனால், கடந்த 1982ம் ஆண்டுக்கு பிறகு இந்த நிலை தலைகீழாக மாறியது. 50 மில்கள் மூடப்பட்டன.

ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனமான என்.டி.சி. யின் மூடப்பட்ட மில்களை மீண்டும் திறக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதல்கட்டமாக பரேல் ஹிந்த்மாதா அருகே உள்ள டாடா மில்ஸ், சிஞ்ச்பொக்லியில் உள்ள போதார் மில்ஸ் மற்றும் இந்தியா யுனைடெட் மில்ஸ் எண்&5 ஆகிய 3 மில்களும் சுமார் ரூ.148.67 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது.

இந்த மில்களின் திறப்பு விழா, தாதரில் உள்ள டாடா மில்ஸ் வளாகத்தில் நேற்று நடந்தது. மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தலைமையில் நடந்த விழாவில் நவீனமயமாக்கப்பட்ட 3 என்.டி.சி மில்களை மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் தொடங்கி வைத்தார்.

விழாவில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேசியதாவது:
நலிவடைந்த மில்களை பொதுத் துறை நிறுவனங்களின் நிதியுதவியின் கீழ் புதுப்பிப்பது பொதுவான நடைமுறையாக இருந்தது. ஆனால், இப்போது என்.டி.சி. சுயமாக நிதி திரட்டி மூடப்பட்ட மில்களை திறக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, மும்பை செக்டருக்காக என்.டி.சி. ரூ.2,000 கோடி நிதியை திரட்டியது. இந்த நிதியில் பெரும்பாலானவை மில் தொழிலாளர்களின் நலனுக்காக செலவிடப்பட்டது. தற்போது 3 மில்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மும்பை மீண்டும் மில்கள் நிறைந்த நகராக, இந்தியாவின் மான்செஸ்டராக உருவெடுக்க மகாராஷ்டிர அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். இந்திய ஜவுளி தொழில் தொன்மையானது. இந்தியாவில் ஜவுளி தொழில் நிறைந்த நகரமாக மும்பை விளங்கியதால் ‘கிழக்கத்திய நாடுகளின் மான்செஸ்டர்’ என்ற அடைமொழி உருவானது. 1961ல் மும்பையில் உள்ள மில்களில் சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்தனர். ஆனால் தற்போது 58 மில்களில் 20 ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் வேலை செய்கின்றனர். டாடா, போதார் மற்றும் இந்தியா யுனைடெட் மில்ஸ் எண்&5 ஆகிய 3 மில்களும் ரூ.148.67 கோடி செலவில் என்.டி.சி.யால் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக