செவ்வாய், 19 ஜனவரி, 2010

அன்னிய நிறுவனங்களுக்கு டாட்டா காட்டுகிறது சீனா


ஹாங்காங் : வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சீனா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற காலம் மலையேறி விட்டது. இப்போது அங்கு நுழைய நினைக்கும் அன்னிய நிறுவனங்களுக்கு அது தண்ணி காட்டுகிறது.

சர்வதேச அளவில் தொழில் துறை நுணுக்கங்களை கையாளும் முன்னணி வழக்கறிஞர் ஸ்டீவன் டிக்கின்சன். இவர் 1981ம் ஆண்டு முதல் சீனாவில் அன்னிய நிறுவனங்கள் தொழில் தொடங்க உதவி வந்துள்ளார். அதற்கான சட்ட உதவிகளை அளிப்பார்.
சில ஆண்டுகள் முன்பு வரை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற சீனா, இப்போது சீண்ட மறுப்பதாக டிக்கின்சன் கூறுகிறார். அவரது பேட்டி:
சீனாவில் தொழில் துறையின் ஏற்ற இறங்கம், இடது வலது எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். இப்போது சீனாவில் தொழிற் கொள்கையில் தலைகீழ் மாற்றம் தெரிகிறது. வெளிநாட்டு வர்த்தகத்தை மதிப்பதில் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.

அன்னிய நிறுவனங்களை சீனாவுக்கு அதிகாரிகள் வரவேற்ற நிலை மாறி, அனுமதி அளிப்பதை தட்டிக் கழிக்கும் நிலை இப்போது உள்ளது. அதே சட்டங்களை இப்போது வேறு வழியில் கையாண்டு அன்னிய நிறுவனங்களை தவிர்க்கின்றனர். கேட்டால் நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை என்று பதில் வருகிறது.

இதற்கு பல வழிகளை கையாள்கின்றனர். தொழில் தொடங்க அன்னிய நிறுவனங்கள் அனுமதி கோரினால், விண்ணப்பங்களை சுற்ற விடுகின்றனர். விதிமுறையில் இல்லாததை செய்யுமாறு கூறுகின்றனர். சட்டப்படி அது தேவையில்லை என்று தெரிவித்தால் Ôநீங்கள் எங்களுக்கு தேவையில்லைÕ என்ற பதிலே கிடைக்கிறது.

உலக அளவில் மீடியாக்கள் இது சீனாவின் நூற்றாண்டு என்கின்றன. சீனப் பொருளாதாரம் சூப்பர்பவர் என்கின்றனர். இதை சீனா நம்பத் தொடங்கி விட்டது. ஏழ்மையான நாடல்ல நாம் என்று நினைக்கிறது. எனவே, அன்னிய நிறுவனங்களை தவிர்க்கிறது என்று டிக்கின்சன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக