ஞாயிறு, 24 ஜனவரி, 2010

நாளை குடியரசு தின விழா : நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு


புதுடெல்லி: நாட்டின் 61வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து. நாடு முழுவதும், ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை யொட்டி, டெல்லியில் கண்கவர்மிக்க பேரணி நடக்கிறது. குடியரசு தினவிழாவை சீர்குலைக்க பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் ஊடுருவக் கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.

மேலும், லஸ்கர் தீவிரவாதிகள், ஐரோப்பாவில் இருந்து Ôபாரா&கிளைடர்Õ என்ற இருவர் பறக்கும் குட்டி விமானங்களை வாங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தி தீவிரவாதிகள் வான்வெளி தாக்குதலும் நடத்தக் கூடும் என்று தகவல் கிடைத்துள்ளதால், விமானப்படையும் ராணுவமும் உஷார்படுத்தப்பட்டு இருக்கிறது.

அணிவகுப்பு நடைபெறும் விஜய்சவுக்கில் இருந்து செங்கோட்டை வரையிலான 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு 15,000 டெல்லி போலீசாரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு உள்ளனர். டெல்லி முழுவதும் தரையில் இருந்து வானம் வரை தீவிர கண்காணிப்பு போடப்பட்டு இருக்கிறது. அந்தநேரத்தில் டெல்லி வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின பேரணி செல்லும் பகுதிகளில் 105க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. இவற்றின் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், டெல்லி முழுவதும் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி மட்டுமல்லாது மும்பை, சென்னை, ஐதராபாத், பெங்களூர், கொல்கத்தா உட்பட பல முக்கிய நகரங்களின் மீது தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளது.

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த தாக்குதல் போல் மீண்டும் தாக்குதல் நடத்தவும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. அதனால், மும்பையில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பைக்கு செல்லும் எல்லா வழிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக