ஞாயிறு, 31 ஜனவரி, 2010

பட்டுப்புழு விவசாயிகளுக்கு எஸ்எம்எஸ்ஸில் விலை விவரம்


பெங்களூர் : கர்நாடக மாநில பட்டுப்புழு விவசாயிகளுக்கு கூட்டுப்புழு விலை, பட்டு நூல் விலை, மழை புயல் பற்றிய விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக பட்டுப்புழு வளர்ப்புத்துறை அமைச்சர் வேங்கடரமணப்பா கூறியதாவது:
விவசாயிகள் ஒரு ஆண்டு முழுக்க கூட்டுப்புழு விலை, பட்டு விலை மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள ரூ.600 சந்தா செலுத்த வேண்டும். சந்தா செலுத்தும் பொழுது தங்கள் மொபைல் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும். இந்த வசதி மிகவும் எளிமையான முறையில் செயல்படுத்தப்படுகிறது.
சந்தா செலுத்திய விவசாயிகளுக்கு ராமனகரம், சன்னப்பட்னம், சித்தலஹட்டா ஆகிய நகரங்களில் உள்ள மார்க்கெட்டுகளில் இருந்து விலை விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். கூட்டுப்புழுக்களின் விலை விவரங்களோடு பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் விவசாயிகளுக்கு தேவையான பருவ நிலை, உஷார் அறிவிப்புகள் ஆகியவையும் மொபைல் மூலமாகவே விவசாயிகளுக்கு கிடைக்கும்.

இது போன்ற மொபைல் தகவல் முறை மகாராஷ்டிர மாநிலத்தில் அமல் செய்யப்படுகிறது. அங்கு ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் விலை விவரங்களுக்காக சந்தா செலுத்துகின்றனர்.

கர்நாடகாவில் உள்ள ராமனகரம், சித்தலஹட்டா ஆகிய இரண்டு கூட்டுப்புழுசந்தைகளிலும் இடைத் தரகர்களை ஒழிக்க சிசிடிவி அமைப்பு ஏற்படுத்தப்படும். இடைத்தரகர்கள் மார்க்கெட்டுக்குள் நுழைந்ததும் சிசிடிவி மூலம் கண்காணித்து வரும் அதிகாரிகள் எச்சரிக்கை வெளியிடுவார்கள் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக