ஞாயிறு, 10 ஜனவரி, 2010

நீருக்கடியில் இருந்த கார் ரூ.59 லட்சத்துக்கு ஏலம்


லண்டன் : கடந்த 73 ஆண்டுகளாக நீருக்கு அடியில் கிடந்த பகாடி காரை ஏலத்தில் ரூ.59 லட்சத்துக்கு வாங்க பலர் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

சொகுசு கார் நிறுவனமான பகாடி 1925ம் ஆண்டில் தயாரித்த மாடல் டைப் 22 பகாடி. அதை வாங்கிய ஒருவர், அரசுக்கு வரி செலுத்த தவறியதால் அதிகாரியால் பறிமுதல் செய்யப்பட்டது. புத்தம் புதிய காரை அலுவலகத்தில் நிறுத்தி வைத்து வரியை எதிர்பார்த்து அதிகாரி காத்திருந்தார். ஆனால், காரின் உரிமையாளர் வரவேயில்லை. அதனால், 11 ஆண்டுகள் வரை அதை பாதுகாத்து வந்த அதிகாரி விரக்தி அடைந்தார். காரை அழித்து விட முடிவு செய்தார். 1936ல் இத்தாலி எல்லையோரத்துக்கு அதை ஓட்டிச் சென்ற அவர், மாகியோர் என்ற ஆழமான ஏரிக்குள் காரை தள்ளி விட்டார்.

அந்தக் காரைப் பற்றி ஏரியை ஒட்டிய கிராமத்தினர் கதை கதையாக பேசிக் கொண்டனர். நீருக்குள் கார் இருக்குமா என பந்தயம் கட்டியதும் உண்டு. 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு டைவிங் வீரர் ஏரிக்குள் சென்று காரை தேடினார். 160 அடி ஆழத்தில் அது இருப்பதை கண்டுபிடித்தார். பிறகு தொடர்ந்து நீச்சல் வீரர்கள், காரை பார்த்து திரும்புவது வாடிக்கையானது. சமீபத்தில் அந்தக் காரை ஏரியில் இருந்து வெளியே எடுத்து அறக்கட்டளைக்கு நிதி திரட்ட ஏலம் விட முடிவு செய்தனர். கார் வெளியே கொண்டு வரப்பட்டது.

அதன் டயர்களில் காற்று இருந்ததும், நீல நிற பெயின்ட் நீடித்ததும் ஆச்சரியம் தந்தது. பிரான்சின் பொன்ஹாம்ஸ் நிறுவனம் அதை வருகிற 23ம் தேதி ஏலம் விடுகிறது. அதில் ரூ.59 லட்சம் வரை கொடுத்து காரை வாங்க சிலர் ஆர்வம் தெரிவித்துள்ளனர். இந்த விலையில் புதிய சொகுசு காரை வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக