சனி, 16 ஜனவரி, 2010

ஜல்லிக்கட்டில் 63 பேர் காயம்


அலங்காநல்லூர் : உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று விமரிசையாக நடந்தது. மாடு முட்டி 63 பேர் காயமடைந்தனர். 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பொங்கலை ஒட்டி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடப்பது வழக்கம். நேற்று இந்த நிகழ்ச்சி கோட்டை முனியாண்டி சுவாமி கோயில் திடலில் நடந்தது. காலை 10.30 மணிக்கு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலாவதாக, கிராம கோயில் காளை ரசிகர்களின் விசில்பறக்க களமிறங்கியது. 5 நிமிடங்களுக்கு மேல் நின்று விளையாடிய இந்த காளையை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. கூர்சீவப்பட்ட கொம்புடன் சீறிப்பாய்ந்து வீரர்களை துவம்சம் செய்த காளைகளை, வீரர்களும் ஓடிச்சென்று அடக்கினர். பல காளைகள் யாரிடமும் சிக்காமல் நாலுகால் பாய்ச்சலில் ஓடி உரிமையாளர்களுக்கு பரிசு பெற்று தந்தன.
பெரும்பாலான காளைகள் கொம்புகளால், வீரர்களை மேலே தூக்கிவீசி பந்தாடின. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளிகாசுகள், பித்தளை, சில்வர் பாத்திரங்கள், கட்டில், பீரோ, சைக்கிள் போன்ற பரிசுகளுடன் பொன்னாடை அணிவிக்கப்பட்டது. சிறப்பாக காளைகளை அடக்கிய 2 வீரர்களுக்கு அமைச்சர் அழகிரி தங்கமோதிரம் பரிசளித்தார்.

மாடு முட்டியதில் 63 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த 6 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். செல்வம் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

ஜல்லிக்கட்டு சுப்ரீம் கோர்ட் விதிமுறைகள்படி நடத்தப்பட்டது. விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் கண்காணித்தனர். 377 காளைகள், 607 வாலிபர் களுக்கு கால்நடை இணை இயக்குநர் ராஜகோபால் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. அதில் 22 காளைகள், 111 வீரர்கள் தகுதியில்லை என வெளியேற்றப்பட்டனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட லட்சத்துக்கு மேற்பட்டோர் பார்த்து ரசித்தனர். மதுரை எஸ்.பி. தலைமையில் 15 இன்ஸ்பெக்டர்கள், 60 எஸ்.ஐ., 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக