ஞாயிறு, 24 ஜனவரி, 2010

வெண்ணெயை தடை செய்தால் ஆண்டுக்கு 3,500 பேர் உயிரை பாதுகாக்கலாம்


லண்டன்: பிரிட்டனில் வெண்ணெய் மற்றும் பிற உயர் கொழுப்பு வகை உணவுகளைத் தடை செய்தால் ஆண்டுக்கு 3,500 பேரின் உயிரைக் காக்க முடியும் என பிரிட்டனின் பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஷியாம் கோல்வெகர் கூறினார். லண்டன் யூனிவர்சிட்டி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நிபுணராக பணி புரிபவர் ஷியாம் கோல்வெகர். அவர் கூறிய கருத்துகளை இன்டிபென்டன்ட் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

எளிதில் கிடைக்காத உணவு வகைகளை தேடிப்பிடித்து மக்கள் வாங்கிச் சாப்பிடுவதில்லை. எளிகாகக் கிடைக்கிற, எளிதில் தயாரிக்கக் கூடிய உணவு வகைகளைத்தான் விரும்புகிறார்கள். அந்த வகையில் மக்களுக்கு எளிதாகக் கிடைப்பது ரொட்டியும் வெண்ணெயும். இரண்டு ஸ்லைஸ் ரொட்டி, கொஞ்சம் வெண்ணெய், அத்துடன் தடவிக்கொள்ள ஏதாவது கிரீம் அல்லது ஜாம் அவர்களுக்கு போதும். இந்த வகை காலை உணவில் ஒருவருக்கு 16.1 கிராம் உயர் கொழுப்பு கிடைக்கிறது.

ஒருவர் நாளொன்றுக்கு உயர் கொழுப்பு வகைகளை 20 கிராம் வரை சாப்பிடலாம். அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால் காலை உணவில் மட்டும் 16.1 கிராம் கொழுப்பு சாப்பிடும் ஒருவர், நிச்சயம் மற்ற இரண்டு வேளை உணவிலும் கொழுப்பை அதிகமாகச் சாப்பிடும் நிலை ஏற்படுகிறது.

அதே நபர் காலை உணவில் கொழுப்பு குறைவான, வெண்ணெய்க்கு மாற்றான ஒன்றை ரொட்டித்துண்டுகளின் மேற்பரப்பில் தடவிக் கொண்டால் அவர் உண்ணும் கொழுப்பின் அளவு 92 சதவீதம் குறைகிறது. இந்த வகையில் சாப்பிடும் ஒருவர் நாளொன்றுக்கு உட்கொள்ளும் கொழுப்பின் அளவை 8 கிராம்வரை குறைக்கலாம். இதற்கு அரசு தான் உதவ வேண்டும். வெண்ணெய் போன்ற உயர் கொழுப்பு வகை உணவுப் பொருட்க¬ளை தடை செய்ய வேண்டும். இதனால் இதயநோய்களைக் குறைக்கலாம். பிரிட்டனில் பெரும் ஆட்கொல்லியாக விளங்குவது இதய நோய்தான். அதற்கு காரணம் கூடுதலான கொழுப்புள்ள உணவு வகைகள்தான். வெண்ணெய் போன்ற உயர் கொழுப்பு வகைகளை தடை செய்தால் ஆண்டுக்கு சுமார் 3500 உயிர்களைக் காக்க முடியும்.

எங்களிடம் சிகிச்சைக்கு பலர் வரும் பொழுது நாங்கள் உதவி எதுவும் செய்ய முடியாத நிலையில்தான் வருகிறார்கள். கொழுப்பில்லாத எளிய வகை உணவுக்கு மாறுவது அவர்களுக்கு பெரிய உதவிகரமான வழியாக அமையும். இவ்வாறு ஷியாம் கோல்வெகர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக