ஞாயிறு, 10 ஜனவரி, 2010

இறந்தவர் உயிர் பிழைத்தார்


சென்னை : தனியார் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் உயிர் பிழைத்தார்.

அண்ணா நகர் (மேற்கு) குஜநாயக்கன் தெருவை சேர்ந்தவர் கோபி (42). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி அனுராதா. மாதவரத்தில் உள்ள கம்பெனியில் செக்யூரிட்டியாக கோபி வேலை பார்த்தார். கடந்த மாதம் 30ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோபியை சேர்த்தனர்.
இந்நிலையில், கோபி இறந்து விட்டதாக கடந்த 7ம் தேதி டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடலை உறவினர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றனர். அங்கு ஐஸ் பெட்டியில் கோபியின் உடலை வைத்த போது உடல் ஆடியுள்ளது. வாயில் நுரை தள்ளியது. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை உடனடியாக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சோதனை செய்த டாக்டர்கள், அவர் உயிருடன் இருப்பதாக தெரிவித்தனர். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோபியின் உறவினர் தனபால் கூறியதாவது:

கோபியை தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்கள் 48 மணி நேரத்தில் காப்பாற்றி விடலாம் என்றனர். ரூ.1.40 லட்சம் மருந்துகள் வாங்கி கொடுத்தோம். மருத்துவமனை பில் மட்டும் ரூ.1.25 லட்சம் ஆகிவிட்டது.

இந்நிலையில் கோபி இறந்துவிட்டார். ரூ.1 லட்சத்தை செலுத்தி விட்டு உடலை எடுத்து செல்ல டாக்டர்கள் கூறினர். அதன்பின் மருத்துவமனையில் பேசி ரூ.40 ஆயிரம் கட்டிவிட்டு கோபியின் உடலை எடுத்து சென்றோம். உடலை புதைக்க எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டோம். உறவினர்களும் மாலைகளுடன் வந்துவிட்டனர். ஆம்புலன்சில் உடலை கொண்டு சென்ற போது அசைவுகள் இருந்தன. வீட்டுக்கு கொண்டு சென்றதும், கோபி உயிருடன் இருக்கிறான். இறந்து விட்டதாக கூறுகிறாய்’ என்று அங்கிருந்தவர்கள் சொன்னபோது அதிர்ச்சி அடைந்தேன். அதன்பின் கோபியை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தோம்.
இவ்வாறு தனபால் கூறினார்.

மருத்துவமனை டீன் டாக்டர் மோகனசுந்தரம் கூறுகையில், ‘‘கோபி மிகவும் மோசமான நிலையில் உள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் மூலம் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக