வெள்ளி, 8 ஜனவரி, 2010

உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயின் புர்ஜ் துபாய் (புர்ஜ் கலீபா)


துபாய் என்றும் கனவுலகமாகவே காட்சி தருகிறது வெளியிலிருப்பவர்களுக்கு! கனவுகளை நினைவுகளாக ஆக்குவதே துபாய் யின் சிறப்பு அம்சம்!

துபாயினை பற்றி எவ்வளவோ ஆச்சர்யமான மூக்கில் விரலை வைத்து கேட்கும் அளவிற்கு பேச்சுக்கள். இந்த 18 மாதங்களாக துபாய்
ஆடிப்போய் விட்டது என்று பீதியூட்டும் பேச்சுக்கள்! பேச்சுக்களில் உண்மை உள்ளது என்றாலும், வெளியில் பேசப்படுவது அதிகமே!
வியாபார சுழற்சியில் ஏற்றம், இறக்கம் எப்போதுமே உள்ளது. “தேவைக்கு ஏற்ப தான் வழங்க வேண்டும்” (Demand & Supply) என்ற
அடிப்படை விதியினை ஒதுக்கி விட்டு மிக வேகமாக செயல்படும் போது பிரச்னை வரத்தான் செய்யும் என்கிறார் எம்மார் (Emmar) என்ற
பிரபல முத்திரை கட்டிடங்களை கொண்டு வந்த நிறுவனத்தின் தலைவர் அல் அப்பார். இவர் மன்னரின் வலது கரம் கூட! இந்த நிலையினை
பற்றி கேட்கும் போது, "மன்னர் ஷேக் முஹம்மது அவர்களை போன்று ஒரு சிறந்த நிர்வாகியினை பார்க்க முடியாது. ஒரு திட்டத்தினை
சமர்ப்பித்தால், நன்றாக இருந்தால், நல்லது தொடருங்கள்" என்பார். இன்று வரை மலைபோல் நிலை குனியாமல் துணிவுடன் உள்ளார். அவரிடம்
கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் என்கிறார்.

துபாய் நகரில் போக்குவரத்தினை வசதிப்படுத்த 36-48 மாதங்களில் கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் அளவிற்கு பாலைவன மண்ணில் Rail Trackனை
கான்கிரீட்டில் அமைத்து, அதி நவீன நுட்பமான ஓட்டுநர் இல்லாத ரயில்களை சொன்ன தேதியில் 9-09-09ல் ஓட வைத்த பெருமை அவரையே
சாரும்.

இன்று அவர் மன்னராக பதவியேற்று 4வது வருட நாளில் உலகின் மிக உயரமான கட்டிடமான Burj Dubaiயினை இன்று மாலை திறந்து
உலக வரலாற்றில் மிகப் பெரிய முத்திரையினை பதித்து பெருமை சேர்த்து விட்டார்.

கடந்த பிப்ரவரி 2003ல் ஒரு இரவு விருந்தில் எம்மார் (EMMAR) தலைவர் முஹம்மது அல் அப்பார் அவர்களிடம் கனடா நாட்டை சார்ந்த
மார்க் மற்றும் குழுவினரால் வைக்கப்பட்ட கோரிக்கை தான் பின்பு மன்னரின் (ஷேக் முஹம்மது) வழிகாட்டுதலும், அனுமதியும் பெற்று
இன்று உலகிலேயே மிக மிக உயர்ந்து நிமிர்ந்து நிற்கிறது புர்ஜ் துபாய் (துபாய் டவர்). கிட்டத்தட்ட 200 ஹெக்டேர் பாலைவன நிலப்பரப்பில்,
Business Bay District (வணிகக்கடல் மாநகர்) என்று உருவாக்கப்பட்ட, கிட்டத்தட்ட ரூ.1 இலட்சம் கோடி மதிப்புள்ள திட்டத்தில் அடங்கியதே
புர்ஜ் துபாய் . இந்த வணிகக்கடல் மாநகரில் நடுவில் அமைந்துள்ள புர்ஜ் துபாய் , செப்டம்பர் 21, 2004ல் ஆரம்பிக்கப்பட்டது. 192 கான்கிரீட் தூண்கள்
(Pillars), ஒவ்வொன்றும் 43மீ நீளம். இதன்மேல் தான் இந்த கட்டிடம் நிற்கிறது. அடித்தரை 12500 கனமீட்டர் கட்டிட தளத்துடன், 3 மீட்டர்
தடிப்புடன் உள்ளது.

கடலுக்கு அருகில் இருப்பதால் கான்கிரீட் இரும்புகள் துருப்பிடிக்கும் என்பதால், அதற்குரிய துருப்பிடிக்காத அளவிலான சிறப்பான அம்சங்களும்
அமைக்கப்பட்டுள்ளன. காற்று அழுத்தம், ஈர்ப்பு விசை மற்றும் பூமி அதிர்வு இவைகளை தாங்கக் கூடிய சக்தி கொண்டதாகவும், உலகின் சிறப்பான
கட்டிட நிபுணர்களால் கவனத்துடன் கையாளப்பட்டுள்ளது.

124வது பார்க்கும் தளம்
124வது பார்க்கும் தளத்தில் செல்வதற்கு டிக்கெட் US$54 அதாவது துபாய் திர்ஹம் 210, இந்தியன் ரூபாயில் 2600. இண்டர்நெட் மூலம் முன்பதிவு
செய்து வந்து பார்த்தால் திர்ஹம் 100 (ரூ.1200). இங்கு வந்து பார்த்தால் பாலைவனம், பாலைவனத்தில் உயரமான கட்டிடங்கள், சுற்றிலும்
உருவாக்கப்பட்டுள்ள சோலைகள், கடல் இவைகளை பார்க்கலாம். திர்ஹம் 10 செலுத்தி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள டெலஸ்கோப்பில்
எல்லாவற்றையும் மிக அருகாமையில் இருப்பது போன்று காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றிலும் பரிசு பொருட்கள் நிரம்பிய கடைகள்
உள்ளது. வரிசையில் நின்று பார்க்க மக்கள் தயாராக உள்ளனர்.

124 வது தளத்தில் உள்ள டெலஸ்கோப்

பிப்ரவரி 2007ல் இந்த கட்டிடம் சியர்ஸ் கட்டிடம் (Sears Building, Chicago) எனப்படும் 110 அடுக்குமாடி கட்டிடத்தினை தாண்டியது.

ஜுலை 21, 2007ல் இந்த கட்டிடம் Taipei Finance Centre எனப்படும் கட்டிடத்தின் உயரமாகிய 509.2மீட்டரைத் தாண்டியது.

ஆகஸ்ட் 12, 2007ல் இந்த கட்டிடம் Sears Tower Antenna, Chicago கட்டிடத்தின் உயரத்தினை தாண்டியது.

செப்டம்பர் 3, 2007ல் இது ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள Ostankino Towerன் உயரமாகிய 540 மீட்டரைத் தாண்டியது.

செப்டம்பர் 12, 2007ல் கனடா, டோரண்டோவில் அமைந்துள்ள CN Towerன் உயரமாகிய 555.3மீட்டரை கடந்து சாதனை புரிந்தது.

மேலும், KVLY-TV Mast மற்றும் USA கட்டிடங்களின் 628.8 மீட்டரையும் கடந்து, இன்று 800 மீட்டரையும் கடந்து உலகின் மிகப் பெரிய உயரமான
கட்டிடமாக மிளிர்கிறது.

இந்த கட்டிடத்தில் மொத்தம் 57 (Lift) மின் தூக்கிகளும், 8 (Escalator) மின் சறுக்கு படிகளும் உள்ளன. அனைவரும் சரியாக குறிப்பிட்ட நேரத்தில்
சேர இந்த மின் தூக்கிகள் Intelligence System என்ற மின்னணு தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு மின்தூக்கிகள் (Lift) இரண்டு அடுக்கு (Double Deck) கொண்டது. இது தரை தளத்திலிருந்து 124வது மாடி ஆன பார்க்கும் தளம்
(Observation Deck) எனப்படும் இடம் வரை செல்கிறது. இந்த மின்தூக்கிகளின் உட்பகுதி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
1 வினாடிக்கு 10 மீட்டர் உயரம் செல்லும் ஆற்றல் உள்ள இந்த மின்தூக்கியில் 55 வினாடிகளில் 124வது தளத்தினை சென்று அடையமுடியும்.

இங்குள்ள லிப்டுகள் அதிகபட்ச வேகமாக 1 வினாடிக்கு 10 மீட்டர் உயரம் வரை செல்லக் கூடியதாக உள்ளது.

இந்த கம்பீரமான கட்டிடத்தின் 100வது மாடியினை வாங்கியவர் யார்?
இந்த கட்டிடத்தின் 100வது மாடியினை வாங்கிய பெருமை நமது பெங்களூரை சார்ந்த 1970களில் அபுதாபியில் வந்து இப்போது மிகப்பெரிய
தொழில் அதிபராக திகழும் B.R. செட்டி என்பவர் 100வது மாடியை ரூ.45 கோடிக்கு வாங்கியுள்ளார். இப்போது அதனை விட அதிக விலைக்கு
யார் கேட்டாலும் இதனை விற்க மாட்டேன். என்னுடைய அலுவலக பணிக்காக வைத்துக் கொள்வேன் என்றும், உலகின் மிகப்பெரிய உயரமான
கட்டிடத்தின் 100வது மாடியில் என்னுடைய இடம் இருப்பது எனக்கு பெருமை என பெருமை கொள்கிறார். இந்தியர் வாங்கியதில் நமக்கும்
பெருமையே!

இன்று உலக Guiness Recordல் இடம் பெற போகும் 160க்கும் மேற்பட்ட அடுக்கு மாடிகளை கொண்ட, 800 மீட்டர் உயரத்தில், 8000 கோடி
ரூபாய் மதிப்புள்ள இந்த கட்டிடத்தில் நம் இந்தியர்களின் உழைப்பு சொல்லில் அடங்காது. கட்டுமான பணி, கொத்தனார், கம்பி கட்டுபவர்,
லிப்டு போடுபவர், A/c, எலக்ட்ரிக் வேலை போன்ற எந்த Technical, Labour Work ஆக இருந்தாலும் அதில் வேலை செய்தவர்களில்
பெரும்பான்மையோர் நம் தாய் திருநாட்டின் மைந்தர்களே! மனைவி, மக்களை பிரிந்து, வந்திருக்கும் நாட்டிற்கு விசுவாசமாக பணிபுரிந்து இந்தியன்
என்ற பெருமையினை நிலை நாட்டிய நம் சகோதரர்களுக்கு சலாம் சொல்லுவதே நாம் செய்யும் முதல் மரியாதையாக இருக்கும்!

இன்று மன்னரால் என்றும் இல்லாத அளவிற்கு அதிசயத்தக்க வான வேடிக்கைகள், மின் அலங்காரங்கள் இப்படி குதூகலத்துடன் திறக்கப்பட
உள்ள இக்கட்டிடத்தினை உலகம் முழுவதும் 2 பில்லியன் (200 கோடி) மக்கள் டிவியிலும், இண்டர்நெட்டிலும் பார்த்து களித்துள்ளனர் என
செய்திகள் கூறுகின்றன. இந்த கட்டிட திறப்பால் துபாய் பொருளாதாரம் வளருமென்று மிகவும் நம்பப்படுகிறது. கடந்த 4,5 நாட்களாக இந்த
கட்டிடத்தின் உரிமையாளர்களான Emaarன் Stock Value நன்கு உயர்ந்து வருவதும் ஒரு சான்று! துபாய் மன்னர் நம்பிக்கையும், தெளிவான
சிந்தனையும், முன்னோக்கு பார்வையும் கொண்டவர்! நிச்சயம் துபாய் மீண்டும் எப்போதும் போல் வரும். நாங்கள் பேச மாட்டோம், செய்வோம்,
செய்து நிரூபிப்போம்! என்பதே ஷேக் முஹம்மதுவின் வார்த்தை! நிச்சயம் நடக்கும்!

உலகில் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளில் இது மாதிரி கட்டிடம் கட்ட குறைந்தபட்சம் இதனைவிட 50 சதவீதம் அதிக செலவு ஆகும்
என்பது நிபுணர்கள் கருத்து. இவ்வளவு செலவு குறைவுக்கு முக்கிய காரணம் நமது இந்திய தொழிலாளர்களே!

இதை விட பெரிய உயரமான கட்டிடங்கள், திட்டமிடுதல் அளவிலேயே உள்ளது. அவை உயிர் பெற்று, செயல்பாட்டிற்கு கொண்டு வந்து இந்த
கட்டிடத்தின் உயரத்தினை அடிப்பதற்கு குறைந்தது 10 வருடம் ஆகும் என்பது நிபுணர்கள் கருத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக