செவ்வாய், 26 ஜனவரி, 2010

61வது குடியரசு தினம்: சென்னையில் கோலாகல விழா


சென்னை : இந்தியாவின் 61வது குடியரசு தினம் நேற்று சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மெரினா கடற்கரையில் நடந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் கவர்னர் பர்னாலா தேசியக்கொடி ஏற்றி, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களை முதல்வர் கருணாநிதி வழங்கினார். கடும் பனியையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வமாக பங்கேற்றனர். குழந்தைகள் குதூகலமாக கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை ரசித்தனர்.

கடற்கரை காந்தி சிலை அருகே விசேஷ பந்தல் போடப்பட்டிருந்தது. அமைச்சர்கள், நீதிபதிகள், சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் உட்பட ஏராளமான பிரமுகர்கள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே வந்து அவரவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில் அமர்ந்திருந்தனர். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்.

காலை 7.50 மணிக்கு முதல்வர் கருணாநிதி வந்தார். அவரை தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி வரவேற்றார். கடற்கரை காமராஜர் சாலையில் காரிலேயே சென்று சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களை பார்த்து கையசைத்து வாழ்த்து தெரிவித்தார் முதல்வர்.
பொதுமக்களும் பதிலுக்கு அவருக்கு உற்சாகமாக வாழ்த்து தெரிவித்தனர். ஐந்து நிமிடத்தில் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா வந்தார். அவரை முதல்வர் வரவேற்று முப்படை தளபதிகள், காவல்துறை உயரதிகாரிகளை சம்பிரதாயப்படி அறிமுகப்படுத்தினார்.

காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொடிக் கம்பத்தில் சரியாக 8 மணிக்கு பர்னாலா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டரில் இருந்து மலர்களை தூவினர். திரண்டிருந்த மக்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இதையடுத்து அணிவகுப்பு தொடங்கியது. முப்படை வீரர்கள், கடலோர காவல்படை, ரயில்வே பாதுகாப்பு படை, தமிழக காவல்துறை, சிறப்பு கமாண்டோ படையினர் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து சென்றனர். அணிவகுப்பு மரியாதையை பர்னாலா ஏற்றுக் கொண்டார்.
பின்னர் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கங்களை முதல்வர் கருணாநிதி வழங்கினார். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் நீரில் மூழ்கிய 12 குழந்தைகளை காப்பாற்றி உயிர்விட்ட ஆசிரியை சுகந்திக்கான விருதை அவரது தந்தை மாரியப்பனிடமும், வைகை அணையில் வீசப்பட்ட குழந்தையை காப்பாற்றிய முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் அண்ணா பதக்கத்தை முதல்வர் வழங்கினார்.

மத நல்லிணக்கத்துக்காக பாடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரை சேர்ந்த முகைதீனுக்கு கோட்டை அமீர் விருது வழங்கப்பட்டது. மதுவிலக்கை சிறப்பாக அமல்படுத்தியதற்காக திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் எஸ்பி நாகராசன், தர்மபுரி மாவட்ட கூடுதல் எஸ்பி விவேகானந்தன், தர்மபுரி மாவட்ட டிஎஸ்பி சீனிவாசன், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி ஆகியோருக்கு உத்தமர் காந்தியடிகள் விருதை முதல்வர் வழங்கினார்.

இதையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. பல வண்ண உடைகளில் மாணவிகள் நடத்திய கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன. ஆளுநரும், முதல்வரும் கலை நிகழ்ச்சிகளை ரசித்து பார்த்தனர். அவ்வப்போது கைதட்டி மாணவிகளை உற்சாகப்படுத்தினர். தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் பல்வேறு மாநில கலைக் குழுவினர் தங்கள் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். மேற்குவங்க கலைக்குழுவினர் நடத்திய ராய்பென்சா நடனம் வித்தியாசமாக இருந்தது.

பின்னர், பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடந்தது. முதலாவதாக அன்னப்பறவை போல வடிவமைக்கப்பட்ட வாகனம் சென்றது. அதை தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வள்ளுவர் கோட்ட அலங்கார ஊர்தி சென்றது. அதில், கோவையில் நடக்கவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு முதல்வர் அழைப்பு விடுப்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. கலைஞர் காப்பீடு திட்டத்தை விளக்கும் ஊர்தியும் அணி வகுப்பில் இடம் பெற்றது.

கலை நிகழ்ச்சிகளில் சைதாப்பேட்டை மாநகராட்சி மேல்நிலை பள்ளி முதல் பரிசை வென்றது. ராணி லேடி மெய்யம்மை மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டாவது பரிசும், சைதாப்பேட்டை ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கு மூன்றாவது பரிசும் கிடைத்தன.

கல்லூரி அளவில் குரோம்பேட்டை எஸ்.டி.என்.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரிக்கு முதல் பரிசும், ராணிமேரி கல்லூரிக்கு 2வது பரிசும், அண்ணாநகர் வள்ளியம்மாள் மகளிர் கல்லூரிக்கு 3வது பரிசும் கிடைத்தன.

அலங்கார ஊர்தி அணிவகுப்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வாகனத்துக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இந்த வாகனத்தில் பிரதமர் மன்மோகன்சிங், முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் போன்று வேடமிட்டவர்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை ஆய்வு செய்யும் காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது பரிசு தகவல் தொழில்நுட்ப துறைக்கும், மூன்றாம் பரிசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநல துறைக்கும் கிடைத்தன.

விழாவை ஒட்டி கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் காலை 6 மணியில் இருந்தே கடற்கரை சாலையில் தேசிய கொடிகளுடன் மக்கள் குவியத் தொடங்கினர். சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து கலை நிகழ்ச்சி மற்றும் அணிவகுப்பை பார்வையிட்டனர். பலர் தேசியக் கொடியை அசைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக