சனி, 30 ஜனவரி, 2010

மராத்தி ரியாலிட்டி இசை நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் தமிழர், வட இந்தியர்!


மும்பை: இசைக்கு மொழி இல்லை என்பார்கள். அது மகாராஷ்டிராவில் உண்மையாகியுள்ளது.

ஜீ மராத்தி சேனலில் நடத்தப்படும் ரியாலிட்டி இசை நிகழ்ச்சியான 'மராத்தி சரிகம' என்ற நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கு இரண்டு மராத்தி மொழி அல்லாதோர் தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களில் ஒருவர் தமிழர், இன்னொருவர் வட இந்தியர். அபிலாஷா செல்லம் என்பவர் தமிழ்ப் பெண். இன்னொருவரான ராகுல் சக்சேனா இந்திக்காரர்.

இறுதிச் சுற்றுக்கு வந்துள்ள ஒரே மராத்தி நபர் பத்லாபூரைச் சேர்ந்த ஊர்மிளா தங்கர் மட்டுமே.

மராத்தி இசை நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது குறித்து அபிலாஷாவும், ராகுலும் கூறுகையில், ஆரம்பத்தில் மராத்தி மொழி எங்களுக்கு மிகக் கடினமானதாகவே இருந்தது. ஆனால் பழகப் பழக அது மிகவும் இனிய மொழியாக தோன்றியது.

கடந்த ஆண்டுதான் மும்பைக்கு இடம் பெயர்ந்தாராம் அபிலாஷா. அவர் கூறுகையில், வெறும் 7 மராத்தி பாடல்களை மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டுதான் இந்தப் போட்டிக்கான ஆடிஷன் டெஸ்ட்டுக்கு வந்தேன்.

ஆனால் நிகழ்ச்சியி்ல் கலந்து கொள்ள ஆரம்பித்த பின்னர் பெரிய ஆராய்ச்சியே செய்து முடித்து விட்டேன். இப்போது என்னால் மராத்தி பாடல்களை புரிந்து கொண்டு பாட முடியும்.

இந்தப் போட்டிக்காகவே ஒரு குழு உண்டு. அது பாடல்களின் அர்த்தத்தை எங்களுக்கு சொல்லித் தரும். இப்போது அது எனக்குத் தேவையாக இல்லை. காரணம் நானே அர்த்தத்தைப் புரிந்து கொண்டு பாடுகிறேன் என்றார்.

ராகுல் 7 ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு வந்தவராம். இவருக்கு மராத்தி பாடல்கள், கலாச்சாரம் மீது பெரும் மோகம் உண்டாம். இதனால் மராத்தி பாடல்களை சும்மா இருக்கும்போது கூட முனுமுனுத்தபடி இருப்பாராம். ஆனால் அர்த்தம் தெரியாமலேயே. இப்போது அர்த்தத்தைப் புரிந்து கொண்டு பாடுகிறாராம்.

இந்தி சரிகம நிகழ்ச்சியின் வெற்றியாளர்தான் இந்த ராகுல். இந்தியன் ஐடல் போட்டியிலும் இவர் இறுதிச் சுற்று வரை முன்னேறியுள்ளார். அதேசமயம், அபிலாஷா, வாய்ஸ் ஆப் இந்தியா போட்டியில் பங்கேற்றவர்.

இருவருக்குமே மராத்தி பின்னணிப் பாடகர்களாக வேண்டும் என்ற லட்சியமே வந்து விட்டதாம்.

மேலும் அபிலாஷாவுக்கு சென்னை சென்று கர்நாடக இசையை முழுமையாக கற்கும் ஆர்வமும் உள்ளதாம்.

இப்படி இரு நான் மராத்திகளுக்கு மத்தியில் சிக்கியிருந்தாலும் போட்டியில் வெல்வது குறித்து கவலைப்படாமல் இருக்கிறார் மண்ணின் மகளான ஊர்மிளா. சிறந்தவருக்கே வெற்றி கிடைக்கும். எனவே நான் பயப்படவில்லை என்கிறார் கூலாக.

ஜனவரி 31ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் வெற்றியாளர் அறிவிக்கப்படவுள்ளார்.

அதற்குள் ராஜ் தாக்கரே, பால் தாக்கரே கோஷ்டிகள் பஞ்சாயத்தைக் கிளப்பி விட்டு விடாமல் இருக்க பிரார்த்திப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக