ஞாயிறு, 17 ஜனவரி, 2010

தனியார் வங்கியை வாங்கும் முயற்சியில் ஐ.டி.பி.ஐ வங்கி


ஐ.டி.பி.ஐ வங்கி, தனியார் வங்கிகளை வாங்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாக, இந்த வங்கியின் சேர்மனும், மேலாண்மை இயக்குநருமான யோகேஷ் அகர்வால் தெரிவித்தார்.

மும்பையில் நடைபெற்ற பான்கான் கருத்தரங்கில் பங்கேற்க வந்த யோகேஷ் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், வங்கியை வாங்குவது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இது எப்போது முடிவடையும் என்று கூற முடியாது என்று தெரிவித்தார்.

ஐ.டி.பி.ஐ வங்கி சென்ற நவம்பரில், இதன் நிதி நிறுவனத்தை விற்பனை செய்யும் முடிவை கைவிட்டு இருப்பதாகவும், மற்ற வங்கியை வாங்கும் முயற்சியில் இருப்பதாக அறிவித்தது.

இன்டஸ்டிரியல் டெவலப்மென்ட் பாங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் பெரிய தொழில் திட்டங்களுக்கு கடன் வழங்குவதற்காக ஐ.டி.பி.ஐ தொடங்கப்பட்டது. பிறகு இது ஐ.டி.பி.ஐ வங்கி என்ற எல்லா தரப்பு மக்களுக்கும் வங்கி சேவையை அளிக்க, தனியாக வங்கியை தொடங்கியது. 2005 ஆம் ஆண்டு ஐ.டி.பி.ஐயுடன், இதன் துணை நிறுவனமான ஐ.டி.பி.ஐ வங்கியும் இணைந்தது.
பிறகு 2006 இல் யுனைடெட் வெஸ்டர்ன் பாங்க் என்ற வங்கியை இணைத்துக் கொண்டது.

ஐ.டி.பி.ஐ வங்கிக்கு அடுத்த மூன்று வருடங்களில் முதலீடுக்காக ரூ.15 ஆயிரம் கோடி தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.7,500 கோடி முதல் எட்டாயிரம் கோடி வரை மத்திய அரசு வழங்கும் என்று எதிர்பார்த்தது. ஆனால் மத்திய அரசு அடுத்த நிதி ஆண்டு வரை பொதுத்துறை வங்கிகளுக்கு முதலீட்டிற்காக நிதி வழங்குவதை ஒத்தி வைத்தது. சென்ற நிதி ஆண்டு இறுதியில் ஐ.டி.பி.ஐ வங்கியின் முதலீடு-வர்த்தக விகிதாச்சாரம் 11.57 விழுக்காடாக இருந்தது.

ரிசர்வ் வங்கி, வங்கிகளின் முதலீடு-வர்த்தக விகிதாச்சாரம் 9 விழுக்காடாக இருக்கு வேண்டும் என்று கூறியுள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு முதலீட்டிற்காக நிதி வழங்க வேண்டுமெனில். முதலீடு-வர்த்தக விகிதாச்சாரம் 12 விழுக்காடாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

மத்திய நிதி துறை செயலாளர் ஆர்.கோபாலன் நேற்று, வங்கிகளின் ஆற்றல் அதிகரிக்கும் வகையில் இருந்தால், பொதுத்துறை வங்கிகள் இணைவதை அரசு ஆதரிக்கிறது என்று தெரிவித்தார்.

இதற்கு சில நிமிடங்களுக்கு பிறகு, ஐ.டி.பி.ஐ வங்கி சேர்மன் யோகேஷ் அகர்வால், தனியார் வங்கியை வாங்க இருப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பொதுத்துறை வங்கிகளில் மற்ற வங்கிகளை போல ஐ.டி.பி.ஐ வங்கி, பெரிய வங்கி அல்ல. அத்துடன் இந்த வங்கி மற்ற வங்கியுடன் இணையாது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக