திங்கள், 11 ஜனவரி, 2010

எல்லா வங்கிகளிலும் ஒரே அளவு கட்டணம்


மும்பை : அரசு, தனியார், வெளிநாட்டு வங்கிகள் உட்பட எல்லா வங்கிகளும் சேவைக் கட்டணங்கள் ஒரே அளவாக நிர்ணயிக்க ரிசர்வ் வங்கி விரும்புகிறது. இதற்கான புதிய விதிமுறைகளை இந்திய வங்கிகள் சங்கத்திடம் (ஐபிஏ) கேட்டுள்ளது.

வங்கிகளில் பெறப்படும் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதில் மூன்று தரப்பிலும் வித்தியாசம் காணப்படுகிறது. வங்கிகள் தங்கள் விருப்பம்போல கட்டணம் வசூலிக்கின்றன.

உதாரணமாக, டிடி எடுக்க அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ரூ.30 வசூலிக்கிறது. அதுவே தனியாரின் ஐசிஐசிஐ, வெளிநாட்டு வங்கியான சிட்டி பாங்க் முறையே ரூ.50, ரூ.150 வசூலிக்கின்றன. காசோலை பணமில்லாமல் திரும்பினால் எஸ்பிஐ ரூ.75ம், ஐசிஐசிஐ, சிட்டி தலா ரூ.350ம் வசூலிக்கின்றன.

இதுபோல பாஸ்புக் பிரதி, செக்புக், பாலன்ஸ் ஸ்டேட்மென்ட், குறைந்தபட்ச இருப்புத் தொகை என எல்லா சேவைகளிலும் வங்கிகள் இடையே கட்டணம் வேறுபடுகிறது. இதுபற்றி ரிசர்வ் வங்கிக்கு ஏராளமான புகார்கள் குவிந்து வருகின்றன.

இதையடுத்து, வங்கிச் சேவைகளுக்கு ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயிப்பது பற்றி பரிசீலிக்க ஐபிஏ&வுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதேபோல, எஸ்பிஐ, கார்ப்பரேஷன் வங்கி, சிட்டி பாங்க், ஐசிஐசிஐ வங்கி பிரதிநிதிகள் கொண்ட துணை கமிட்டி ஒன்றும் புதிய விதிமுறைகளை ஏற்படுத்த பேச்சு நடத்தி வருகிறது.

சேவைக் கட்டணங்கள் தவிர, கைவிடப்பட்ட வங்கிக் கணக்கு(இன்ஆப்ரேடிவ் அக்கவுன்ட்), சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகை ஆகியவை பற்றியும் துணை கமிட்டி பேசி வருகிறது. ஐபிஏ கமிட்டி மற்றும் துணை கமிட்டியின் அறிக்கைகள் பிப்ரவரி இறுதியில் ரிசர்வ் வங்கியிடம் அளிக்கப்பட உள்ளன.

அதை ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்டால் வங்கிச் சேவைக் கட்டண வசூலிப்பில் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய விதிமுறை அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக