செவ்வாய், 26 ஜனவரி, 2010

யுஎஸ்-வங்கி மோசடியில் சிக்கியவருக்கு பத்மபூஷண்!


டெல்லி: வங்கி மோசடியில் சிக்கியவரான அமெரிக்க இந்தியர் சந்த் சிங் சத்வாலுக்கு பத்மபூஷண் விருது அளிக்கப்பட்டிருப்பதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் அது கடிதம் எழுதியுள்ளது.

சத்வாலுக்கு பத்மபூஷண் விருது அளிக்கப்பட்டிருப்பது குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ள பாஜக, இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் லோக்சபா துணைத் தலைவர் கோபிநாத் முண்டே இருவருக்கும் எழுதியுள்ள கடிதத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மோசடி புகாரில் சிக்கிய சத்வாலுக்கு பத்ம பூஷண் விருது அளிக்க பரிந்துரைத்தது பெரும் ஏமாற்றம் அளிக்கிது.

இதன் மூலம் பெருமை வாய்ந்த பத்ம பூஷண் விருதுக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பெரும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக சர்ச்சைக்குள்ளானவர் சத்வால். அப்படிப்பட்டவர் இந்த விருதைப் பெற பொருத்தமற்றவர். எனவே இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறினார்.

யார் இந்த சத்வால்...

அமெரிக்காவில் ஹோட்டல் குழுமத்தை நடத்தி வருகிறார் சத்வால்.

அங்கு 9 மில்லியன் டாலர் வங்கி நிதியை மோசடி செய்ததாக அவர் சர்ச்சைக்குள்ளானார். மேலும், இதுதொடர்பாக கைதும் செய்யப்பட்டவர். இதனால்தான் சத்வாலுக்கு பத்மபூஷண் விருது அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் தனக்கு இந்த விருது கிடைத்திருப்பது திரில்லாக இருப்பதாக சத்வால் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியத் தூதர் மீராசங்கர் மூலம் எனக்கு விருது கிடைத்துள்ள தகவலை அறிந்தேன். மிகவும் திரில்லாக இருக்கிறது. இந்திய அரசுக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

பாஜகவின் எதிர்ப்பு குறித்து எனக்குத் தெரியாது. எனது நாட்டை நான் நேசிக்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவின் நலனுக்காகவும் நான் உழைத்து வருகிறேன்.

கட்சிகள் குறித்து எனக்குக் கவலை இல்லை. அவை வரும் போகும். நாடு மாறாது.

இந்த விருதின் மூலம் எனது முயற்சிகளையும், சேவைகளையும் அங்கீகரித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நான் நன்றி கூறுகிறேன் என்று கூறியுள்ளார் சத்வால்.

சத்வால் தவிர மேலும் 12 என்.ஆர்.ஐகளும் பத்ம விருது பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக