வியாழன், 7 ஜனவரி, 2010

வருமான வரி விதிப்பு ஏப்ரலில் எளிதாகிறது


புதுடெல்லி : அடுத்த நிதி ஆண்டு முதல் (2010&11) வருமான வரி விதிப்பு முறைகளை மேலும் எளிதாக்க மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. அதன்படி, 10, 20, 30 சதவீதம் என 3 அடுக்காக உள்ள வரி விதிப்பு 2 ஆக குறைக்கப்படுகிறது.

வருமான வரி விதிப்பில் இப்போது தனிநபர் வருவாயைப் பொறுத்து 10, 20 மற்றும் 30 சதவீதம் என 3 அடுக்குகள் நடைமுறையில் உள்ளன. அதிக வருவாய் பிரிவினரிடம் 30 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. இந்த 3 வரி அடுக்குகள் ஆண்டுதோறும் அப்படியே பராமரிக்கப்பட்டு, வருமான வரி விலக்கு தொகை மட்டுமே ஆண்டுதோறும் பட்ஜெட்டில் மாற்றம் செய்யப்படுகிறது.

அடுத்த நிதி ஆண்டு முதல் வரி விதிப்பு அடுக்குகளை குறைக்க மத்திய நிதி அமைச்சகம் தீவிர பரிசீலனை செய்து வருகிறது. புதிதாக அமலுக்கு வரவுள்ள புதிய வரிக் கொள்கையில் 10, 20 மற்றும் 30 சதவீதம் என்ற 3 அடுக்கு வரி முறையே பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. எனினும், அவற்றில் ஒன்றைக் குறைப்பதில் நிதி அமைச்சகம் ஆர்வம் காட்டி வருகிறது.
இதன் மூலம் வரி செலுத்துவோரின் சிரமம் குறையும். வரி செலுத்துவது எளிமையாகும் என அது கருதுகிறது. அத்துடன், 3ல் இருந்து 2 ஆக வரி விதிப்பு அடுக்குகளை குறைக்கும்போது, வருமான வரி சதவீதத்தையும் குறைக்க நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. விலைவாசி உயர்வால் நடுத்தர வருவாய் பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, வரி சதவீதத்தை சிறிது குறைப்பதன் மூலம் வரி செலுத்துவோர் பயனடையச் செய்வதே நோக்கம். அத்துடன், வரி சதவீதம் குறைந்தால் புதிதாக வரி செலுத்துவோர் அதிகரிப்பார்கள். அதன்மூலம், அரசுக்கு வரி வருவாயில் ஏற்படும் இழப்பை தவிர்க்கலாம் என்றும் மத்திய நிதி அமைச்சக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக