ஞாயிறு, 3 ஜனவரி, 2010
வட மாநிலங்கள் முடங்கின.
புதுடெல்லி : வரலாறு காணாத பனி மூட்டத்தால் வட மாநிலங்கள் நேற்று முடங்கின. கடுங்குளிரில் மக்கள் நடுங்கினர். உத்தர பிரதேசத்தில் 3 ரயில் விபத்துகள் ஏற்பட்டு 10 பேர் பலியாகினர். பனி காரணமாக வடமாநில மின் தொகுப்பில் ஏற்பட்ட கோளாறால் டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களும் சண்டிகார் மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியும் இருளில் மூழ்கின. விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்துகள் முடங்கின.
வட மாநிலங்களில் சில வாரங்களாக பனி மூட்டம், கடுங்குளிர் வாட்டுகிறது. நேற்று உச்ச கட்டமாக இயல்பு வாழ்க்கை முடங்கியது. காலை 10 மணி ஆகியும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் நடுங்கினர். உத்தர பிரதேசத்தில் மிக அதிக பாதிப்பு தெரிகிறது. அங்கு இரண்டு நாளில் 25 பேருக்கு மேல் குளிரால் இறந்துள்ளனர்.
டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும் பனி மூட்டம் கடுமையாக இருந்தது. ரயில், விமான, சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
விடிந்து பல மணி நேரம் தாண்டிய பிறகும் சாலையில் எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. அதனால் பல வாகனங்கள் விபத்தில் சிக்கின. அமிர்தரசில் அதிகபட்சமாக மைனஸ் 1.2 டிகிரி செல்ஷியஸ் குளிர் இருந்தது. ரயில்கள், விமானங்கள் ரத்தானதால் பயணிகள் ரயில் நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் குளிரில் நடுங்கியபடி தங்கியிருந்தனர்.
உ.பி.யில் கடுமையான பனி மூட்டம் நிலவியதால் 50 மீட்டருக்குள் இருக்கும் பொருட்களைக்கூட பார்க்க முடியவில்லை. தண்டவாளத்தில் ரயில் நிறப்தும் தெரியவில்லை. இதனால் 3 இடங்களில் ரயில் விபத்துகள் நடந்தன. டெல்லியில் இருந்து அலகாபாத் செல்லும் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் 8 மணிக்கு கான்பூர் மாவட்டம் பாங்கி ரயில் நிலையத்தில் நின்றிருந்தது. அப்போது, பிவானியில் இருந்து கோரக்பூர் செல்லும் கோரக்தம் எக்ஸ்பிரஸ் அதன் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 10 பயணிகள் பலியானார்கள். 40 பேர் படுகாயம் அடைந்தனர். 10 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. கோரக்தம் ரயிலில் பயணம் செய்த பா.ஜ. தலைவர் முரளி மனோகர் ஜோஷி, காங்கிரஸ் எம்.பி. கமல் கிஷோர் ஆகியோர் காயமின்றி தப்பினர்.
இதே மாநிலத்தில் சராய் பாபத் நிலையத்தில் மகத் எக்ஸ்பிரஸ் 9 மணியளவில் நின்றிருந்தது. டெல்லியில் இருந்து சித்தாமரி செல்லும் லிச்சாவி எக்ஸ்பிரஸ் வேகமாக வந்து பின்புறம் மோதியது. மகத் எக்ஸ்பிரசின் கடைசி பெட்டிகள் நொறுங்கின. லிச்சாவி எக்ஸ்பிரஸ் டிரைவர் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
அலகாபாத் அருகே ஆளில்லாத ரயில்வே கிராசிங்கை கடந்த டிராக்டர் டிராலி மீது சராயு எக்ஸ்பிரஸ் மோதியது. டிராலி தூக்கி வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் இல்லை. ரயில் விபத்துகளில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.
வட மாநில மின்தொகுப்பில் மின்சாரம் கடத்தும் சாதனங்களில் பனி மூட்டத் தால் கோளாறு ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட் டது. இதனால் அதிகாலை முதல் மின்சாரம் தடைபட்டு 5 மாநிலங்கள் இருளில் மூழ்கின. மின்சார மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நின்றன. புறநகர் மின்ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டதால் மக்கள் தவித்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக