ஞாயிறு, 3 ஜனவரி, 2010
பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது.
தேனி : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முத்துபட்டினத்தைச்சேர்ந்த வெங்கடசலத்தின் மகன் பொன்குமரன்(42). இவருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், மலாய் உள்ளிட்ட பல மொழிகள் பேசத்தெரியும். இவர் கடந்த 92ம் ஆண்டில் தெய்வானை என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை பிரிந்த பொன்குமரன் சென்னை சென்றார். அங்கு ஒரு சினிமா ஸ்டூடியோவில் கம்ப்யூட்டர் பிரிவிலும், பின்னர், நட்சத்திர ஓட்டலிலும் வேலை செய்தார். அப்போது ஆடம்பரத்தில் நாட்டம் கொண்டார். இதற்காக தனது பெயரில் ஒரு இணையதளத்தை துவக்கினார்.
அமெரிக்காவில் பெரிய கம்பெனியில் மாதம் ரூ.10 ஆயிரம் டாலர் சம்பளத்தில் வேலை பார்ப்பதாகவும், இந்திய வம்சாவளியை சேர்ந்த தனக்கு, எந்த மொழியை சேர்ந்த பெண் கிடைத்தாலும் திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார். தனக்கு இந்தியாவில் உறவினர் யாரும் இல்லை என்றும், சென்னை, புனே, மும்பை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான சொத்துகள் உள்ளதாகவும் கூறியிருந்தார்.
இதை நம்பி போடியைச் சேர்ந்த நளினி(35) என்பவர், இவரிடம் தொடர்பு கொண்டார். சரளமாக ஆங்கிலத்திலும், இந்தியிலும் இவர் பேசியதை பார்த்து நளினி ஏமாந்தார். பெற்றோர் ஒப்புதலுடன் பொன்குமரனை கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்தார். பின்னர், போடியில் எஸ்டேட் தொழில் துவங்கி, இங்கேயே தங்குவதாக கூறி நளினியின் பெற்றோரிடம் ரூ.47 லட்சம் வாங்கிய பொன்குமரன், தொழிலுக்கு மேலும் பணம் தேவைப்படுவதாக கூறி நளினியிடம் இருந்து 150 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு சென்றார். இதன்பின், அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தேனி எஸ்பி பாலகிருஷ்ணனிடம் நளினி புகார் அளித்தார். டிஎஸ்பி உமா தலைமையில் போலீஸ் தனிப்படை அமைத்து பொன்குமரனை தேடி வந்தனர். இப்படையினர், நேற்றுமுன்தினம் தேனியில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்த பொன்குமரனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், புனேயில் 2 பெண்களை ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்ததும் தெரியவந்தது. இன்னும் பல பெண்களை திருமணம் செய்து லட்சக்கணக்கில் ஏமாற்றியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக