சனி, 16 ஜனவரி, 2010
ரயில்கள் மோதலில் 3 பேர் பலி
லக்னோ : கடும் பனிப்பொழிவு வட மாநிலங்களில் நேற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. விமான, ரயில், சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உ.பி.யில் சிக்னலுக்காக காத்திருந்த ரயில் மீது வேகமாக வந்த மற்றொரு ரயில் மோதியது. கடும் பனி மூட்டம் காரணமாக நடந்த இந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். 14 பேர் காயம் அடைந்தனர்.
வடமாநிலங்களில் பல வாரங்களாக நிலவும் பனிப் பொழிவு இன்னும் ஓயவில்லை. அருகில் நிற்பவர் கூட கண்ணுக்கு தெரியாத நிலையே நீடிக்கிறது. பனி மூட்டம் காரணமாக இந்த மாதத்தில் 3 ரயில் விபத்து நடந்தது. 10 பேர் பலியானார்கள்.
இந்த நிலையில், உ.பி.யில் நேற்று மீண்டும் ரயில்கள் மோதிக் கொண்டன. டெல்லியில் இருந்து கான்பூர் செல்லும் ஷரம்சக்தி எக்ஸ்பிரஸ் ரயில் துண்ட்லா நிலையம் அருகே சிக்னலுக்காக நின்றது. அப்போது, அதே தண்டவாளத்தில் பிவானியில் இருந்து கான்பூர் செல்லும் காலிந்தி எக்ஸ்பிரஸ் வந்தது. அந்த ரயிலுக்கு சிவப்பு சிக்னல் போடப்பட்டிருந்தது. பனி மூட்டத்தால் இன்ஜின் டிரைவருக்கு சிக்னல் தெரியவில்லை. இதனால், ஷரம்சக்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி பெட்டி மீது காலிந்தி எக்ஸ்பிரஸ் வேகமாக மோதியது. ஷரம்சக்தி ரயிலின் கடைசி 2 பெட்டிகள் நொறுங்கி தடம் புரண்டன.
மீட்பு குழுவினர் விரைந்து சென்று ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். 14 பேர் காயம் அடைந்தனர். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் தரப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனிடையே நொய்டா எக்ஸ்பிரஸ் சாலையில் நேற்று அடுத்த டுத்து 15 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதிக் கொண்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக