புதன், 20 ஜனவரி, 2010

திருந்தாத ஜென்மங்கள்!


ஒவ்வொரு குழந்தையும் ஒரு அழகிய பூவுக்கு சமம். பள்ளிக் கூடம் நடத்துகிறோம் எனும் பெயரில் அந்தப் பூக்களை காலில் போட்டு நசுக்கும் காவாலித்தனத்தை சிலர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அதன் விளைவு ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு தனியார் பள்ளியின் கூரை சரிவது, தீப் பிடிப்பது, பள்ளி வாகனங்கள் விபத்தில் சிக்குவது என பல்வேறு வழிகளில் இந்தப் பூக்கள் சிதைந்து சின்னாபின்னமாகி வருகின்றன. இந்த சம்பவங்கல் நடப்பது தவிர்க்கமுடியாத காரணங்களால் அல்ல. அலட்சியம் காரணமாகவே என்ற உண்மை ஆத்திரத்தைக் கூட்டுகிறது.

இதோ இன்று வேதாரண்யம் மற்றும் ஆத்தூரில் நடந்த இரு விபத்துகளில் 10 குழந்தைகள் துர்மரணத்தைச் சந்தித்துள்ளன.

ஒரு குழந்தையின் அழுகையையே தாங்க முடியாத மனதுக்கு 10 குழந்தைகளின் மரணம் சவுக்காலடித்த வேதனையைத் தருகின்றன. இது தவிர 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த இரு விபத்துக்களிலும் காயமடைந்துள்ளனர்.

இந்த மரணங்களுக்கான காரணம் தெளிவானது… அது பள்ளிகளின் பணம் சம்பாதிக்கும் பேராசை. ஒவ்வொரு தனியார் பள்ளியும் கட்டணம் என்ற பெயரில் அடிக்கிற கொள்ளை போதாதென்று, குட்டி குட்டியாக போக்குவரத்துக் கழகங்களை வேறு ஆரம்பித்து வைத்துள்ளன.


சரியான பயிற்சி இல்லாத, குழந்தைகளுக்காக வேலை பார்க்கிறோம் என்ற குறைந்தபட்ச உணர்வு கூட இல்லாதவர்கள்தான் இந்த ‘குட்டி போக்குவரத்துக் கழகங்க’ளில் பணியாற்றுகிறார்கள். ஏலத்தில் எடுத்த அடாசு வண்டிகளையெல்லாம், ‘கவனிக்க வேண்டிய இடத்தில் கவனித்து’ எஃப்சி பண்ணி பயன்படுத்துவது இவர்கள் டெக்னிக்.

குழந்தைகளின் வசதியை இவர்கள் கவனத்தில் கொள்வதே இல்லை.

‘எத்தனை ட்ரிப் அடிக்கிறது… ஏத்துடா மொத்தத்தையும் ஒரே ட்ரிப்புல’ என்று பொதி மூட்டைகள் மாதிரி இந்த மழலைச் செல்வங்களை ஏற்றிக் கொண்டு செல்வதுதான் பல விபத்துக்களுக்குக் காரணமாகிறது.

இன்று நடந்த விபத்துக்கும் இதுதான் காரணமாகியுள்ளது. கூடவே, இந்த செல்போன் சனியனும் சேர்ந்து கொண்டது. அப்படி என்னதான் பேசுவார்களோ… காதில் வைத்தால் கருமத்தை எடுக்க மாட்டேன் என்கிறார்கள். இந்த பள்ளிக் குழந்தைகள் பேருந்தை இயக்கிய ஓட்டுநரும் முக்கிய வளைவு ஒன்றை நெருங்கும்போது செல்போன் பேச ஆரம்பித்து, பேலன்ஸ் தடுமாறி குளத்தில் விட்டிருக்கிறான் பேருந்தை.

பழைய தகர டப்பா வேன் வேறு. இதனால் குழந்தைகள் 10 பேர் அந்த இடத்திலேயே இறந்து போக, மீதியுள்ளவர்கள் குற்றுயிரும் குலையுயிருமாக மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு முறை பெரும் விபத்து நேரும் போது மட்டும் ஆளாளுக்கு கண்ணீர் சிந்துவதும், தற்காலிக சபதங்கள் எடுப்பதும் ஓரிரு நாளில் அந்த சபதத்துக்கும் சேர்த்து பாலூற்றிவிட்டு, மீண்டும் அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பிப்பதும்தான் அனைத்து தவறுகளுக்கும் காரணம். பெற்றோர்களுக்கும் இந்த பாவத்தில் பங்கிருக்கிறது.

இறந்தபோன குழந்தைகளுக்கு தலா ரூ 50 ஆயிரம் இழப்பீடு கொடுத்துவிட்டு, அடுத்த நஷ்ட ஈட்டை யாருக்குத் தரலாம் என்று தேடிக் கொண்டிருப்பது அரசுக்கு அழகல்ல.

நல்ல தனியார் பள்ளிகளைத் தட்டிக் கொடுத்தும், மோசமான உள்கட்டமைப்பு உள்ள தனியார் பள்ளிகளை ஒழிப்பதற்கும் சரியான திட்டம் ஒன்றை என்றைக்குத்தான் செயல்படுத்தப்போகிறார்களோ?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக