செவ்வாய், 12 ஜனவரி, 2010

சிறுவர்களை கொல்லும் காட்டு சிறுத்தைகள்


வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறை, வனப்பகுதியை ஒட்டி உள்ளது. வனப்பகுதியில் இருந்து யானை, சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற விலங்குகள், குடியிருப்பு பகுதியில் புகுந்து மக்களை தாக்கி வருகின்றன. ஆடு, மாடு, கோழி, நாய்களை சிறுத்தைகள் கவ்விச் செல்கின்றன. 2006ம் ஆண்டு மே 17ல் ரம்யா, 2007 டிசம்பர் 13ல் கவுசல்யா, 2008 ஏப்ரல் 5ம் தேதி கவுரி ஆகிய சிறுமிகளை சிறுத்தை கவ்விச் சென்று கொன்றது.

வால்பாறையில் கடந்த சில தினங்களாக சிறுத்தை ஒன்று, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.

அரசு மருத்துவமனை வளாகத்திலும் அது நடமாடி வருகிறது. இதனால் நோயாளிகள் மற்றும் பணியாளர்கள் பீதியடைந்தனர். கடந்த 10ம் தேதி தோணிமுடி எஸ்டேட் பகுதியில் மாலையில் விளையாடிக்கொண்டிருந்த முகேஷ்(5) என்ற சிறுவனை சிறுத்தை கவ்விச் சென்று கொன்றது.

அதைத் தொடர்ந்து வால்பாறையில் மேலும் பீதி பரவியது. இதையடுத்து, கக்கன் காலனி, தோணிமுடி எஸ்டேட்டில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
சிறுத்தைகளை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்து அடர் வனப்பகுதிக்குள் விட்டாலும், ஆண்டுதோறும் புதிய சிறுத்தைகள் நகரில் வலம் வரத் தொடங்குகின்றன. சிறுவர், சிறுமிகளை காவு வாங்கி வருகின்றன. மக்கள் வசிக்குமிடத்தில் சிறுத்தை வராமல் தடுக்க வனத்துறை மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக