வெள்ளி, 15 ஜனவரி, 2010

மெரினாவில் 5,000 போலீஸ் குவிப்பு


சென்னை : காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா, எலியட்ஸ் பீச் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் 5,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடைசி நாளான இன்று காணும் பொங்கலை முன்னிட்டு, பொழுதுபோக்க மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள்.

இந்த இடங்களில் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இணை கமிஷனர்கள் ரவிக்குமார், சக்திவேல், துணை கமிஷனர் மவுரியா ஆகியோர் கொண்ட சிறப்பு படையினர் முகாமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி மெரினாவில் மக்கள் குளிக்கவும் படகுகளில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்காக கடற்கரை ஓரங்களில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மெரினாவில் 8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்காலிக போலீஸ் நிலையங்கள், கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தகவல்கள் அளிக்க, எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை பகுதியில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
காமராஜர் சாலையில் போர் நினைவு சின்னம் முதல் காந்தி சிலை வரை சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் வரை வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படும். உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை அருகே பொதுமக்கள் அதிகமாக கூடினால், போர் நினைவு சின்னம் நோக்கி வரும் வாகனங்கள், காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலை, போர் நினைவு சின்னம் செல்லலாம்.

காந்தி சிலையில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தால், பாரிமுனை நோக்கி செல்லும் வாகனங்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜி.பி.ரோடு, அண்ணா சாலை, முத்துச்சாமி பாலம், முத்துச்சாமி பாயின்ட் மற்றும் கொடிமர சாலை வழியாக ராஜாஜி சாலையை சென்றடையலாம்.

காந்தி சிலையில் பகுதியில் பாதசாரிகள் கூட்டம் அதிகரிக்கும்போது, வடக்கு நோக்கி செல்லும் வாகனங்கள், கிரீன்வேஸ் சாலை, ஆர்.கே.மடம் சாலை, மந்தைவெளி சந்திப்பு, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜி.பி.ரோடு, அண்ணா சாலை, பல்லவன் சாலை, சென்ட்ரல் லைட் பாயின்ட், ஈ.வெ.ரா.சாலை, தெற்கு மின்ட் சாலை, ஈவ்னிங் பஜார், என்எஸ்சி போஸ் ரோடு வழியாக ராஜாஜி சாலையை சென்றடையலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக