வியாழன், 14 ஜனவரி, 2010

அதிக நேரம் டிவி பார்த்தால் இதய, புற்று நோய் ஏற்படும்


சிட்னி : நீங்கள் டிவியின் முன்பு அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்களா? அப்படியானால் உங்களுக்கு இதய, புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாம். டிவி பார்க்கும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஆயுள் குறையும் என்கிறது ஒரு ஆய்வு முடிவு.
அதிக நேரம் டிவி பார்ப்பவர்கள் மற்றும் அலுவலகங்களில் கணினி முன்பு ஒரே இடத்தில் நீண்ட நேரம் பணியாற்றுபவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள பேக்கர் ஐடிஐ இதய நோய் சிகிச்சை மையத்தின் வல்லுநர் டேவிட் டன்ஸ்டன் தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.
இதற்காக, இதய நோய் பாதிப்பு இல்லாத 25 வயதுக்குட்பட்ட 3,846 ஆண்கள் மற்றும் 4,954 பெண்கள் உள்ளிட்ட 8800 பேரை தேர்ந்தெடுத்தனர். ஒரு நாளைக்கு 2 மணி நேரம் டிவி பார்ப்பவர்கள், 2 முதல் 4 மணி நேரம் பார்ப்பவர்கள் மற்றும் 4 மணி நேரத்துக்கும் அதிகமாக பார்ப்பவர்கள் என மூன்று குழுவாக பிரிக்கப்பட்டனர்.

அடுத்த 6 ஆண்டுகள் கழித்து அவர்களை அழைத்தபோது, 284 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. இதில் 87 பேர் இதய நோயாலும் 125 பேர் புற்று நோயாலும் மற்றவர்கள் வேறு காரணங்களாலும் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

புற்று நோயால் உயிரிழந்ததற்கும் அதிக நேரம் டிவி பார்த்ததற்கும் ஓரளவு தொடர்பு இருந்தது. அதேசமயம், இதயநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிக நேரம் டிவி பார்த்ததற்கும் நேரடி தொடர்பு இருந்தது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. அதாவது இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 18 சதவீதமாகவும், புற்றுநோய்க்கான வாய்ப்பு 9 சதவீதமாகவும் உள்ளது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, நீண்டநேரம் டிவி பார்த்தால் உயிரிழப்பதற்கு 11 சதவீதம் வாய்ப்பு உள்ளதாம். மனிதர்களின் உயிரிழப்புக்கு புகைப் பழக்கம், ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது போல, அதிக நேரம் டிவி பார்ப்பதற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

டிவி பார்ப்பது மட்டுமல்லாமல், அலுவலகங்களில் ஒரே இடத்தில் அமர்ந்தபடி நீண்ட நேரம் பணியாற்றுபவர்களுக்கும் இத்தகைய நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ÔÔமனிதனின் உடலமைப்பு சுறுசுறுப்பாக இயங்குவதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. ஒரே இடத்தில் முடங்கிக் கிடப்பதற்காக அல்ல. டிவி பார்க்கும் ஒவ்வொரு மணி நேரமும் வாழ்நாள் குறைகிறது. இயக்கமின்றி இருந்தால், கொடிய நோய் ஏற்பட்டு உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளதுÕÕ என ஆய்வாளர் டேவிட் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக