வெள்ளி, 1 ஜனவரி, 2010

புதுகை அருகே ஜல்லிக்கட்டில் 75 பேர் காயம்


பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டியில் நல்லாண்டி ஐயனார் கோயில் திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு நடந்தது. புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன.

கால்நடை டாக்டர் முத்துராமலிங்கம் தலைமையிலான குழுவினர், காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். அதேபோல், மாடுபிடி வீரர்களுக்கும் மது அருந்தியிருந்தார்களா? என்று சோதனை செய்யப்பட்டது.

பின்னர், 400க்கும் மேற்பட்ட வீரர்கள், சீருடையுடன் களத்தில் இறங்கினர். வீர விளையாட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகரன், ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை பிடிக்க வீரர்கள் போட்டி போட்டனர். ஒரு காளை முட்டியதில், பாதுகாப்புக்கு வந்திருந்த ஏட்டு கொத்தாள முத்து காயமடைந்தார். மேலும், மாடுபிடி வீரர்கள் பாலு, மணி, ராஜேந்திரன், ஜெகன், சின்னண்ணன், முத்துராமலிங்கம் உட்பட 74 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். படுகாயமடைந்தவர்கள் பொன்னமராவதி மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காளைகளை அடக்கியவர்களுக்கு ரூ.1,000, ரூ.2,000, ரூ.5,000 மற்றும் சைக்கிள், மிக்ஸி, கிரைண்டர் மற்றும் பிடிபடாத காளைகளுக்கு என மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. பாஸ்கரன் தலைமையில் அதிகாரிகள் ஜல்லிக்கட்டை கண்காணித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக