வெள்ளி, 1 ஜனவரி, 2010

பொங்கலை முன்னிட்டு இலவச விநியோகம் 3.28 கோடி பேருக்கு வேட்டி, சேலை


சென்னை: பொங்கலை முன்னிட்டு 3.28 கோடி பேருக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார். தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ரூ.256 கோடியில் 3 கோடியே 28 லட்சம் பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் தொடக்க விழா சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் நேற்று காலை நடந்தது. விழாவுக்கு வருவாய்த் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் முன்னிலை வகித்தார். இலவச வேட்டி சேலைகளை வழங்கி திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பரிதிஇளம்வழுதி, மத்திய அமைச்சர்கள் ஜெகத்ரட்சகன், பழனிமாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். வருவாய் துறை செயலாளர் தனவேல் வரவேற்றார். தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, மேயர் மா.சுப்பிரமணியன், வருவாய் நிர்வாக ஆணையர் சுந்தரதேவன் ஆகியோர் பேசினர். கலெக்டர் ஷோபனா நன்றி கூறினார்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று மாலை நடந்த விழாக்களில் இலவச வேட்டி சேலைகளை அமைச்சர்கள் வழங்கினர். இன்று முதல் 10ம் தேதி வரையில் ரேஷன் கடைகள் மூலம் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படுகின்றன. 10ம் தேதிக்குள் வாங்க முடியாதவர்கள், பின்னர் தாலுகா அலுவலகம் சென்று பெற்றுக் கொள்ளலாம். ரேஷன் கடைகளில் காலையில் 100 பேருக்கும், மாலையில் 100 பேருக்கும் வேட்டி சேலை வழங்கப்படும். இந்த பணிகள் தாசில்தார் மேற்பார்வையில் நடக்கும்.இவற்றை கண்காணிக்கும் பணியில் துணை கலெக்டர்கள் ஈடுபடுவார்கள். இலவச வேட்டி சேலை பெற தகுதியான, ஏழைகள் பட்டியலை நியாய விலைக் கடைகளிலும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் முன்னதாக வெளியிடவும், பட்டியலை பலகையில் ஒட்டி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக