செவ்வாய், 5 ஜனவரி, 2010
உணவுக்கு 25% செலவு
புதுடெல்லி : இந்தியர்களின் ஆண்டு வருமானத்தில் 25 சதவீதம் (4ல் ஒரு பகுதி) உணவுக்கு செலவாகிறது. மருத்துவத்துக்கு 1.5 சதவீதம் மட்டுமே செலவிடப்படுகிறது என்கிறது ஆய்வு முடிவு.
இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் சிஎம்ஐஇ. அது 2008 &09ம் நிதி ஆண்டில் (2008 ஏப்ரல் & 2009 மார்ச்) இந்தியக் குடும்பங்களின் செலவினத்தை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
இந்தியக் குடும்பங்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.1.4 லட்சம். குடும்பங்களின் ஒட்டுமொத்த வருவாய் அளவு ரூ.2,800 கோடி. அதில் அதிகபட்சமாக 25.4 சதவீதம், உணவுக்கு செலவிடப்பட்டுள்ளது.
அடுத்த இடத்தை மின்சாரமும், பெட்ரோல் அல்லது டீசலும் பிடித்தன. அவற்றுக்கு செலவிட்ட தொகை 7.6 சதவீதம். 1.74 சதவீதத்துடன் போக்குவரத்து செலவுக்கு 3வது இடம் கிடைத்தது. வீட்டுக் கடன் உட்பட கடன்களைத் திருப்பிச் செலுத்தும் மாதத் தவணைக்கு 1.4 சதவீதம் செலவானது.
மருத்துவத்துக்கு இந்தியர்கள் செலவிட்டது 1.5 சதவீதம் மட்டுமே. ஆனால், படிப்புக்கு 3.21 சதவீதம் செலவழிக்கப்பட்டு உள்ளது.
பொழுதுபோக்கு மற்றும் மது வகைகளுக்கு முறையே 0.64 மற்றும் 0.6 சதவீதம் செலவானது. ஓட்டல் உட்பட வெளியிடங்களில் சாப்பிடுவதற்கு இந்தியர்கள் தங்கள் ஆண்டு வருமானத்தில் 1.02 சதவீதம் செலவிட்டனர். எனினும், உணவுக்கான மொத்த செலவில் இது சேர்க்கப்படவில்லை.
வீட்டுச் சாதனங்களை வாங்குவதற்கு 59 சதவீத குடும்பங்கள் செலவிட்டுள்ளனர். 64.55 சதவீத வீடுகளில் டிவி உள்ளது. அதில் 3.17 சதவீத வீடுகளில் எல்சிடி அல்லது பிளாஸ்மா டிவி உள்ளது. 70 சதவீத இந்திய குடும்பங்களில் கடன் வாங்கும் வழக்கமுள்ள நிலையில், 25 சதவீதத்தினர் மட்டுமே வங்கிகளில் கடன் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக