திங்கள், 4 ஜனவரி, 2010
வாட்டியெடுக்கும் வறுமை.
புதிய பொருளாதாரக் கொள்கைகள் எதிர்பார்த்த அளவுக்கு வறுமையை ஒழிக்கவில்லை; இந்த நிலைமை மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது என வருத்தப்பட்டிருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். கிராமங்களில் மாத வருமானம் ரூ.356க்கு கீழ் இருந்தாலும் நகரங்களில் மாத வருமானம் ரூ.538க்கு கீழ் இருந்தாலும் அவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பதாக மத்திய அரசு கணக்கிட்டுள்ளது. இப்படி கிராமங்களில் 28 சதவீதம் பேரும் நகரங்களில் 26 சதவீதம் பேரும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிறகு, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. குறைந்து வந்துள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வேகமாகக் குறையவில்லை என்பதுதான் பிரதமரின் வருத்தம்.
இந்தியா இன்னமும் விவசாய நாடுதான். அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் முதலிடத்தில் இருப்பதும் விவசாயத் தொழில்தான். ஆனால், ஆந்திராவிலும் மகாராஷ்டிராவிலும் இன்னமும் விவசாயிகள் தற்கொலை தொடர்கதையாகத்தான் இருக்கிறது. முக்கியக் காரணம், கந்து வட்டிக் கடன். அடுத்தது, விவசாய விளை பொருள்களுக்கு போதுமான விலை இல்லாத நிலைமை. விவசாய பொருட்களின் விலை உயர்ந்தால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். 75 சதவீத விவசாயிகளின் நன்மைக்காக, மீதமுள்ள 25 சதவீத மக்கள் இதைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என மன்மோகன் கூறியிருக்கிறார். ஆனால் உண்மை நிலைமை என்ன? துவரம் பருப்பு விலை கிலோ ரூ.100ஐ தாண்டிவிட்டது. ஆனால், விவசாயிக்கு கிடைக்கும் விலை ரூ.30தான். மீதி ரூ.70ஐ யார் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார்கள்? சர்க்கரை, எண்ணெய், அரிசி என அனைத்து பொருள்களின் விலையும் இரு மடங்கு, மூன்று மடங்கு உயர்ந்து விட்டன. விவசாயிகள் அப்படியேதான் இருக்கிறார்கள்.
விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு. போக்குவரத்து செலவு அதிகரிப்பால், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் என அனைத்தின் விலையும் உயர்ந்து வருகிறது. அதோடு மருத்துவ செலவு, கல்விச் செலவு, பயணச் செலவு என அனைத்தும் அதிகரித்துள்ளது. இந்த நிலை நீடித்தால் லட்சாதிபதிகள் கூட இன்னும் சில ஆண்டுகளில் வறுமைக் கோட்டை தொட்டு விடுவார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக